சர்வதேச கண்காட்சியில் கலந்து கொள்ளுவதற்கு துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், முன்னணி தொழில்நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்துபேசினார். இதனால் இனி வரும் காலங்களில் பல்வேறு முதலீடுகள் தமிழகம் நோக்கி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.   

துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பில் அமைக்கபட்டுள்ள அரங்கினை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக அங்கு சென்றுள்ளார். தமிழக முதலமைச்சராக அவர் பதவியேற்ற பிறகு அவர் செல்லும் முதல் வெளிநாட்டு பயணமாகும். உலக அளவில் 192 நாடுகள் பங்கேற்கும் துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கும் வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதுமே இந்த பயணத்தின் நோக்கம் என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். இங்கிருந்து 4 மணிக்கு புறப்பட்ட முதலமைச்சர் இரவு துபாய் சென்றடைந்தார். அவரை துபாய்கான இந்திய தூதர் ஜெனரல் அமீர் பூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், அரசு மரியாதையுடன் வரவேற்ற அமீரக அதிகாரிகள், அரசின் சொந்த பி.எம்.டபிள்யூ காரில் அழைத்து சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை துபாயில் ஐக்கிர அரபு அமீரக வர்த்தகம் மற்றும் பொருளாதார துறை அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை செயலாளார் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர். இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐக்கிய அரபு நாடுகளில்‌ உள்ள குறு, சிறு மற்றும்‌ நடுத்தர நிறுவனங்களுக்கும்‌, தமிழ்நாட்டிற்கும்‌ இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல்‌, புத்தாக்கம்‌ மற்றும்‌ புத்தொழில்கள்‌, தொழில்‌ சூழலை மேம்படுத்துதல்‌, விவசாயம்‌, உணவு பதப்படுத்துதல்‌, ஜவுளி மற்றும்‌ ஆடைகள்‌, நகை மற்றும்‌ விலையுயர்ந்த கற்கள்‌, மின்வாகனங்கள்‌, மின்னணுவியல்‌, மோட்டார்‌ வாகனம்‌ மற்றும்‌ வாகன உதிரி பாகங்கள்‌, பொறியியல்‌, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில்‌ இணைந்து பணியாற்றி முதலீடுகள்‌ மேற்கொள்வதன்‌ மூலம்‌ தமிழ்நாட்டிற்கும்‌, ஐக்கிய அரபு நாடுகளுக்கும்‌ இடையே உள்ள பொருளாதாரம்‌ மற்றும்‌ வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர்‌ தமிழ்நாட்டில்‌ தொழில்‌ தொடங்குவதற்கு நிலவும்‌ சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின்‌ இரு அமைச்சர்களையும்‌ தமிழகம்‌ வருமாறு அழைப்பு விடுத்தார்‌. மேலும்‌, தமிழகத்தில்‌ தொழில்‌ தொடங்கிட, முதலீட்டாளர்கள்‌ சூழுவினையும்‌ தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துபாயில் நடைபெற்று வரும் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோவில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொழில்துறை புதிய வளர்ச்சியை கண்டுள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்களின் மாநாடு மூலம் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலம் ஏராளமான தொழில் நிறுவனங்கள், தமிழகத்தை நோக்கி படையெடுத்துள்ளன. அதுமட்டுமல்லாமல், ஏற்றுமதியில் ஏற்றுமதி மற்றும் முன்னணியில் தமிழ்நாடு என்ற மாநாட்டில் பேசிய முதலமைச்சர், Made In TamilNadu என்ற அடிப்படையில் பொருள்களை உற்பத்தி செய்யவேண்டும் என்று அறிவிப்புகளை வெளியிட்டார். இதன் மூலம் தமிழகத்தின் ஏற்றுமதி வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"

இதற்கு அடுத்தகட்டமாக, தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 4 நாட்கள் பயணமாக தமிழக முதலமைச்சர் துபாய் மற்றும் அபிதாபிக்கு சென்றுள்ளார். துபாயில் நடைபெறவுள்ள உலக சர்வேத கண்காட்சியில் பங்கேற்றார். அங்கு தமிழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள அரங்கினை திறந்து வைத்தார். இந்த அரங்கு,தமிழக கலாச்சாரம் மற்றும் தமிழகத்தில் தொழில் தொடங்க சாதகமாக உள்ள அமசங்களை எடுத்துக்கூறும் வகையில் அமைத்துள்ளது. மேலும் பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் அமீரக அமைச்சர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர், முன்னணி தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரிகளையும் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறும் அழைப்பு விடுத்தார்.

இதன் விளைவாக பல்வேறு முதலீடுகள் தமிழகத்தை நோக்கி வருவதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , சொல்லி அடிப்பதில் நமது முதலமைச்சர் கில்லி என்று அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.