அண்ணாமலை மீது வழக்கு..! உரிய தண்டனை வழங்கிடுக- இறங்கி அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். பொய்யான தகவலை கூறி நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பியதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.
திமுக-பாஜக மோதல்
தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் திமுக ஆட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் 17 பேரின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வெளியிட்டிருந்தார். அதில் ஒரு லட்சத்து 50ஆயிரம் கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நிர்வாகிகள் டிஆர் பாலு, உதயநிதி, கனிமொழி உள்ளிட்டவர்கள் அண்ணாமலைக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதில் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்கவில்லையென்றால், 1கோடி, 5 கோடி, 100 கோடி ரூபாய் தர வேண்டும் என ஒவ்வொருவரும் தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
அண்ணாமலைக்கு நோட்டீஸ்
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, பொதுதளத்தில் இருக்கும் தகவலின் அடிப்படையில் தான் புகார் தெரிவித்ததாகவும், எனவே மன்னிப்பு கேட்க முடியாது என தெரிவித்திருந்தார். சட்ட ரீதியாக வழக்கை சந்திக்க தயார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். இந்தநிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14 ம்தேதி திமுக பைல்ஸ் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிராக அவதூறான கருத்துக்களை கூறியுள்ளார். முதலமைச்சருக்கு எதிராக எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்ணாமலைக்கு எதிராக வழக்கு
பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கள் பொய்யானது மட்டும் இல்லாமல் முதலமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. தமிழக முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை வெளியிட்ட அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை மீது அவதூறு சட்டத்தின் கீழ் உரிய தண்டனை வழங்கி உத்தரவிட வேண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக் கால நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி 8 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படியுங்கள்