தமிழக மாணவர்கள் முழுவதுமாக நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தான் மாணவர்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். 

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டமைக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்துள்ளார். இதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இரண்டு வார காலத்துக்கும் மேலாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் திரும்பிய பக்கமெல்லாம் துப்பாக்கி சத்தம், ஏவுகணை தாக்குதல் என புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. துவக்கத்தில் எல்லைப்புறத்தில் நடந்த தாக்குதல் உக்ரைனின் முக்கிய நகரங்களுக்கு நகர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

தொடர் போர் காரணமாக ஒட்டுமொத்த உக்ரைனும் நிலைகுலைந்துள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் உக்ரேனில் தங்கி மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயின்று வந்த நிலையில் போரில் சிக்கி தப்பிக்க வழியின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்துள்ளது. இதற்காக மத்திய அமைச்சர்கள் அடங்கி குழுவை உக்ரைன் எல்லைப்புற நாடுகளுக்கு அனுப்பி சவாலான மீட்புப் பணிகளை வெற்றிகரமாக மத்திய அரசு நிறைவு செய்துள்ளது. இதேபோல் தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்பதற்காக 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது, அந்தக்குழு வெளியுறவு துறையுடன் இணைந்து செயலாற்றி வந்தது.

இந்நிலையில் நேற்றிரவு 9 மாணவர்களுடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம் அப்துல்லா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் அதிகாலை சென்னை வந்தடைந்தனர். அப்போது அவர்களை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மலர்வளையம் கொடுத்து வரவேற்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, உக்ரேனில் தங்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் படித்து வந்தனர். போரின் காரணமாக அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது, டெல்லியில் கட்டளை மையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து மாணவர்களை தொடர்பு கொண்டு அவர்களை மீட்பது குறித்து வாட்ஸ் அப் குழு உருவாக்கி அவர்களை மீட்கும் பணி நடைபெற்றது.

அதில் தமிழ் நாடு அரசின் சார்பில் நாங்கள் ஈடுபட்டோம். துவக்கத்தில் உக்ரைன் நாடு சென்று அண்டை நாடுகளில் தங்கி அங்கிருந்து மாணவர்களை மீட்பது என சிறப்பு குழு முடிவு செய்தது, ஆனால் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அந்த பணியை செய்ததால், அதற்கு அவசியமில்லை, தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தது, இதனால் தமிழக அரசின் குழு டெல்லியில் இருந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டது. அதன் பிறகுதான் அதிக அளவில் தமிழக மாணவர்கள் உக்ரேனில் இருந்து நாடு திரும்பினார். 

நாடு திரும்பிய மாணவர்களை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக தமிழக அரசு சென்னை அழைத்து வரப்பட்டனர். அனைவரும் மீட்கப்பட்டு விட்டு நிலையில், இறுதியாக 9 மாணவர்கள் போர் நடந்து வந்த சுமி பகுதியில் சிக்கி இருந்தனர். அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது, பின்னர் வெளியுறவு துறை அதிகாரிகளோடு ஆலோசிக்க சுமி பகுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறுவதற்கான பேருந்து செலவு மற்றும் அடிப்படை வசதிகள் அனைத்தையும் தமிழக அரசு ஏற்று ஒன்பது மாணவர்களையும் இந்தியா வரவழைத்து, அதன்மூலம் அவர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர் என்றார்.

இந்நிலையில் தமிழக மாணவர்கள் முழுவதுமாக நாடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தான் மாணவர்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்தார். இதற்கான தகவலை தமிழக அரசு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

இன்று விமான நிலையத்தில் உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்கள் கடைசி குழுவினரை நேரில் வரவேற்ற முதலமைச்சர் அவர்கள் அதன் பிறகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் அவர்களிடத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கும் மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தார்கள். என அதில் கூறப்பட்டுள்ளது.