உதான் திட்டத்தின் கீழ் ஓசூர், நெய்வேலி, ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் விமான சேவைகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மண்டல அளவிலான பகுதிகளுக்கு இடையே விமான போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் மத்திய அரசின் முயற்சிகளுக்கு நன்றி.

முக்கிய தொழில் நகரமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், விமான சேவைக்காக உதான் திட்டத்தில் தேர்வாகியுள்ளது. ஆனால் விமான சேவை பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தடையின்மைச் சான்றிதழ் கிடைக்கப் பெற வேண்டும். இந்தச் சான்று கிடைத்தால் விமான சேவை உடனடியாகத் தொடங்க வழி ஏற்படும்.


 
கிருஷ்ணகிரி மற்றும் அண்டை மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கான ஊக்கியாக ஒசூர் விமான நிலையம் திகழ்வதுடன், சென்னை-பெங்களூர் தொழில் வழிச்சாலை மேம்படவும் வழி ஏற்படும். எனவே, ஒசூர் விமான நிலையத்தில் இருந்து விமானச் சேவைகளை உடனடியாகத் தொடங்க சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
 
இதேபோன்று உதான் ஒன்றாவது திட்டத்தின் கீழ், நெய்வேலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விமான இயக்கிகள் தேர்வு செய்வது உள்ளிட்ட ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் பூர்த்தியாகியுள்ளன. எனவே நெய்வேலியில் இருந்து விமான சேவைகளை உடனடியாகத் தொடங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

உதான் இரண்டாவது திட்டத்தின்கீழ், ராமநாதபுரத்திலும் விமான சேவை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மிக முக்கிய ஆன்மிக தலமாகவும் சுற்றுலா தளமாகவும் விளங்கிவருகிறது. எனவே, ராமநாதபுரத்தில் இருந்து விரைவில் விமான சேவையைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

இந்த விஷயங்களில் தாங்கள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.