நாளைக்கு முதல்வராக போவது திமுக தலைவர் மு.க.ஸ்டாடலின் தான் என அதிமுக எம்.எல்.ஏ பரமசிவம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாளையொட்டி அதிமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் பேசுகையில் ஸ்டாலினைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது நாளைக்கு முதல்வராக கூடிய ஸ்டாலின் அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இதைப் பார்த்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சி அடைந்து பரமசிவத்தை பார்த்து மாற்றி சொல்லுமாறு கூறினார். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட பரமசிவம், வரலாற்று பிழை இழைத்து விட்டேன். மு.க.ஸ்டாலின் ஜென்மத்துக்கும் முதல்வராக முடியாது என பேசி ஒருவழியாக கூட்டத்தில் இருந்து தப்பித்தார். 

அதேபோல, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரஸ்- திமுக கூட்டணிதான். நீட் தேர்வை கொண்டு வந்தவர் பிரதமர் முலாயம் சிங் என கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் மன்மோகன் சிங் என கூறினார்.  கடந்த சில நாட்களாகவே அதிமுக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து உளறி வருவது குறிப்பிடத்தக்கது.