ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு.! காதுகள் இல்லை- இறங்கிய அடிக்கும் மு.க. ஸ்டாலின்
ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என கூறியுள்ளார்.
உங்களில் ஒருவன்
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்” தொடரில் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார். இந்தநிலையில், ஆளுநரின் செயல்பாடு, கூட்டணி கட்சிகள் குறித்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அந்த கேள்வி பதிலில்,
கேள்வி: உங்களுடைய எழுபதாவது பிறந்தநாளில், தொண்டர்கள் கொடுத்த பரிசுகளில் உங்கள் மனம் கவர்ந்த பரிசு எது?
பதில்: உங்களில் ஒருவனான என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அழகு பார்த்ததைவிட பெரிய பரிசு இருக்க முடியுமா?
கேள்வி: உங்கள் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பற்றி ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் என்ன சொல்வீர்கள்?
பதில்: ‘தோள் கொடுப்பான் தோழன்’ என்பதன் அடையாளம் அவர்கள்!
ஆளுநர்களுக்கு காதுகள் இல்லை
கேள்வி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே… ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா?
பதில்: இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது.
கேள்வி: வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன?
பதில்: தேர்தல் வியூகங்களின் மூலமாக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. திரிபுராவில் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை திப்ரா மோத்தா கட்சி பிரித்துவிட்ட காரணமாக காங்கிரஸ் - இடதுசாரிகள் அணி தோல்வியைத் தழுவி பா.ஜ.க.வை வெற்றி பெற வைத்துவிட்டார்கள்! நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறார்கள்! கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. திரிபுரா, நாகாலாந்து பற்றிப் பேசுகிறவர்கள் ஏன் மேகாலயா பற்றி பேசுவது இல்லை? அந்த மாநிலத்தில் மொத்த தொகுதிகள் 59.
பொய்யை பரப்பிய பாஜக நிர்வாகிகள்
59 தொகுதியிலும் போட்டியிட்ட பா.ஜ.க., இரண்டே இரண்டு இடங்களில்தான் வென்றது. பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் கட்சிக்குத் தனது ஆதரவை வழங்கியதன் மூலமாக ஆளும்கட்சியாக தன்னை மேகாலயாவில் காட்டிக் கொள்கிறது பா.ஜ.க. இந்த மாதிரியான பிம்பங்களைக் கட்டமைத்து, தாங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதைபோல காட்டி கொள்கிறார்கள்.
கேள்வி: வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதுபோல ஒரு பொய்யான செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறதே?
பதில்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்! அவர்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவர்கள் வருகிறார்கள். இவர்களுக்குத் தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால் சிலர் பொய்யான வீடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறார்கள். வடமாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதுதான்! பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை, நான் எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டதை கவனித்தீர்கள் என்றாலே, இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.
'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு'
இந்தச் செய்தி கிடைத்ததும், உடனே எங்காவது தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று விசாரித்தேன். எந்த இடத்திலும் சிறு தொல்லைகூட ஏற்படவில்லை என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களுக்கும் தெரிவித்திருக்கிறேன். தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் உரிய விளக்கம் அளித்திருக்கிறார். பீகார் அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்து முழுத் திருப்தியோடு சென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும், 'வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு' என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.
வட மாநிலத்தவர் நன்றாகவே உள்ளனர்
தமிழ்நாடும் - தமிழர்களும் ஒற்றுமையையும், சகோதரத்துவத்தையும் விரும்புகிறவர்கள். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' – 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' போன்ற உயர்ந்த சிந்தனை கொண்டவர்கள். இது இங்கிருக்கும் வட மாநிலச் சகோதரர்களுக்கும் நன்றாகவே தெரியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்