எப்போதும் பார்த்தாலும் கமிஷன் நினைப்பிலேயே மு.க. ஸ்டாலின் இருக்கிறார். அதனால்தான் கமிஷன், கரப்ஷன் என்று பேசிக்கொண்டே இருக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்தார்.
அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை சாலிகிராமத்தில் அதிமுக சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.  “என் வெளிநாட்டு பயணத்தை ஸ்டாலின் தொடர்ச்சியாக விமர்சித்து பேசிவருகிறார். என் பயணத்தைக் கொச்சைப்படுத்துகிறார். அவருக்கு பாராட்ட மனமில்லை. மற்ற மாநிலங்களில் முதல்வர்கள் தங்கள் மாநில நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் வெளிநாடுகளுக்கு பயணிக்கிறார்கள். நாம் மட்டும் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் எப்படி தொழில் வளர்ச்சி ஏற்படும். இளைஞர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு கிடைக்கும்? பொருளாதாரம் எப்படி வளரும்? இதையெல்லாம் மனதில்கொண்டுதான் வெளிநாட்டு உலக தமிழர்களின் அழைப்பை ஏற்று நாங்கள் வெளிநாடு சென்றோம். 
இந்த ஆண்டில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில், ரூ. 3.4 லட்சம் கோடி அளவில் தொழில் முதலீட்டை நாம் ஈர்த்திருக்கிறோம். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு பொறுக்க முடியவில்லை. ரோட்டில் போகிறவர்களைக் கூப்பிட்டு கோட்டு சூட்டு போட்டு மாநாட்டில் அமர வைத்திருக்கிறார்கள் என்று கொச்சைப்படுத்திப் பேசினார். அந்தத் தொழிலதிபர்கள் என்னை சந்தித்து வேதனை தெரிவித்தார்கள்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக தமிழகம் உள்ளது. சட்டம் ஒழுங்கும் சீராக இருப்பதாலும் மின்மிகை மாநிலமாக விளங்குவதாலும் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி தொழில் தொடங்க முன் வருகிறார்கள். நீர் மேலாண்மை பற்றியும் மு.க.ஸ்டாலின் குறைகூறி வருகிறார். நீர்மேலாண்மை பற்றி எதுவுமே தெரியாத புலம்பிக்கொண்டே இருக்கிறார். திமுக ஆட்சியில் ஓர் ஏரியாவது தூர்வாரப்பட்டதா? 
நான் விவசாயி.விவசாயிகளின் எண்ணங்களை புரிந்துதான் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இஸ்ரேலில் நீர்மேலாண்மை சிறப்பாக கையாளுகிறார்கள் என்பதால் மீண்டும் வெளிநாடு செல்வேன் என்றேன். உடனே மு.க.ஸ்டாலின் விமர்சிக்கிறார். எதைப் பேசினாலும் முழுமையாகத் தெரிந்துகொண்டு பேசுங்கள். யாரோ எழுதி கொடுப்பதையெல்லாம் பேசாதீர்கள். எப்போதும் பார்த்தாலும் கமிஷன் நினைப்பிலேயே அவர் இருக்கிறார். அதனால்தான் கமிஷன், கரப்ஷன் என்று பேசிக்கொண்டே இருக்கிறார். திமுகவின் எண்ணம் எல்லாமே ஊழலிலேயே மூழ்கி இருக்கிறது. இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுகதான். அதிமுக அரசை குறைகூற திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது?” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.