15 நாட்களில் மணல் விலை குறையும் எனவும், மக்களின் எதிர்பார்ப்புகளை அரசு பூர்த்தி செய்து வருவதாகவும் சேலம் அரசு பொருட்காட்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரசு பொருட்காட்சி விழா சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3,213 பயனாளிகளுக்கு பல்வேறு நலதிட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கி சிறப்புறையாற்றினார்.

அப்போது, அவர் பேசுகையில், 15 நாட்களில் மணல் விலை குறையும் எனவும், மக்களின் எண்ணங்களை அரசு பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது நாள் ஒன்றுக்கு 8,000 லாரிகளில் மணல் அள்ளப்படுவதாகவும், 15 நாட்களில் மணல் அள்ளப்படுவது 12,000 லாரிகளாக அதிகரிக்கும்போது விலை குறையும் எனவும் தெரிவித்தார்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய அடித்தளமாக விளங்குவது பொருட்காட்சிகளே எனவும், சேலம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி குறிப்பிட்டார்.