முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். இதில் அதிமுகவின் இரு அணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது எடப்பாடி தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. இந்த அரசை காப்பாற்றி கொள்ள எடப்பாடி பெரிதும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

காரணம், எடப்பாடி தரப்பில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்,எல்.ஏக்களும், ஒ.பி.எஸ் தரப்பினர் கொடுக்கும் டார்ச்சரும் தான்.

எடப்பாடிக்கு எதிராக அவர்கள் தரப்பு எம்.எல்.ஏக்களே தனி ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

தன் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதில் எடப்பாடி கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகிறார். ஒ.பி.எஸ் தனி அணியாக சென்ற போது அவருக்கு மக்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்தது.

இதையறிந்த எடப்பாடி எப்படியாவது ஒ.பி.எஸ்ஸை வளைத்து போட்டுவிட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு தனது அமைச்சர்கள் மூலம் தூது விட்டார்.

ஆனால் அமைச்சர்கள் நேரடியாக ஒ.பி.எஸ்ஸிடம் செல்லாமல் மீடியாக்களை புறாக்களாக கையில் எடுத்தனர்.

இருதரப்பிலும் பேச்சுவார்த்தைக்காக குழு அமைக்கப்பட்டு வாயிற்கதவுகளை திறக்கும் அளவுக்கு சென்றது. ஆனால் இருதரப்பிலும் தங்கள் வாய்க்கு வந்ததை பேசியதால் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை விழ ஆரம்பித்தது.

இதையடுத்து பேச்சுவார்த்தை குழுவை கலைத்தார் பன்னீர்செல்வம். இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் நாளை ஆலோசனை நடத்துகின்றனர். இதில் அதிமுகவின் இரு அணிகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெற உள்ளது.