Asianet News TamilAsianet News Tamil

வசமாக சிக்கிக்கொண்ட எடப்பாடி! பஞ்சாயத்தில் இறங்கிய ராமதாஸ்... அப்படி என்ன ரகசிய ஆடியோ?

Chief Minister apologizes to government employees Said Ramadoss
 Chief Minister apologizes to government employees Said Ramadoss
Author
First Published Jul 31, 2018, 2:07 PM IST


அவதூறு பேச்சு: அரசு ஊழியர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்! என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்;

அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது; அதை வாங்கிக் கொண்டு ஒழுங்காக வேலை செய்யாமல், போராட்டத்திற்கு மேல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்களை மரியாதைக்குறைவாக ஒருமையில் முதல்வர் விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. 

சேலத்தில் நேற்று முன்நாள் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு பேசியிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு செய்தியாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் கூட, அக்கூட்டத்தில் கலந்து கொண்ட யாரோ ஒருவர் முதல்வரின் பேச்சை ஆடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும் மிகவும் மரியாதைக்குறைவாக பேசும் சர்ச்சைக்குரிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.

‘‘அரசு ஊழியர்கள் நல்லா சிந்தித்து பாருங்க. இன்று ஆரம்ப பள்ளியில் ஹெட்மாஸ்டர்களாக இருப்பவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா? 82 ஆயிரம்  ரூபாய். ஐந்தாம் கிளாஸ் ஹெட்மாஸ்டருக்கு 82 ஆயிரம் ரூபாய். நம்ம பையன் பி.இ, கஷ்டப்பட்டு படித்து, பத்து வருடம் கழிந்தாலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாண்ட மாட்டான். இதேபோல் ஆசிரியர்களுக்கு 160 நாள் லீவு  கிடைக்கிறது.  எட்டாம் வகுப்புவரை படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி, பாஸ், பெயிலே கிடையாது. அப்படியே விட்டுருவான். இவ்வளவு பணத்தையும் வாங்கிக்கொண்டு போராட்டம் நடத்துகின்றனர்’’ என்று எடப்பாடி பழனிச்சாமி பேசியிருக்கிறார். மேலும் பல இடங்களில் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் மிகக்கடுமையாக பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அப்படிப்பட்டவர் அவருக்கும் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால் அவர்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை என்று கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விமர்சிப்பது முறையல்ல. அரசு ஊழியர்கள் முதலமைச்சரிடம் வந்து இனாம் கேட்கவில்லை. அவர்களின் உரிமைகளை மட்டும் தான் கேட்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது விதி. ஆனால், இப்போது பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதியக்குழு அமைக்கப்பட்டு ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதையாவது  முறையாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்? அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயர்த்தப்பட்ட ஊதிய விகிதத்தில் 21 மாதங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க மறுப்பதும், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய மறுப்பதும் எந்த வகையில் நியாயம்? முதலமைச்சரின் கருத்துகளை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும் என்பது கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அம்சமாகும். அதனால் 8&ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்குகின்றனர். ஒருவகையில் பார்த்தால் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க  இது தேவையாகும். இதை முதலமைச்சர் விமர்சிப்பது எந்த வகையில் சரியாகும்? ஒருவேளை ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் சரியாக பணியாற்றவில்லை என்று முதலமைச்சர் நினைத்தால், அந்த நிலையை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளலாம். அரசு ஊழியர்கள் அவர்களின் கடமையை ஒழுங்காக செய்ய   பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தைக் கொண்டு வரலாம். ஆனால், அதை செய்ய மறுப்பது ஏன்?

மாநில அரசின் மொத்த  வரி வருமானத்தில் 61% அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செலவு ஆவதாக முதலமைச்சர் கூறியிருக்கிறார். அது உண்மை தான். இந்த நிலைக்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அரசின் செலவுகள் அதிகரிக்கும் போது, அதற்கேற்ற வகையில் அரசின் வருமானத்தையும் மக்களை பாதிக்காத வகையில் அதிகரிக்க வேண்டும். மக்களை பாதிக்காதவாறு  அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு யோசனைகளை பா.ம.க. அரசுக்கு வழங்கியுள்ளது. அதை செய்யாதது அரசின் தவறு. இதற்காக அரசு ஊழியர்களை விமர்சிப்பதை அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆகும் செலவை விட ஊழல் காரணமாக அரசுக்கு ஏற்படும் இழப்பு மிகவும் அதிகமாகும். எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அவதூறாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுவதை கைவிடுவதுடன், அவர்களிடம் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிலுவையிலுள்ள கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios