காங்கிரஸ் கட்சி விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஆனால் அதை பெரிதாக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அதேவேளையில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலைகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும் கூறி வந்த முதல்வர் குமாரசாமி, தற்போது காங்கிரஸ் கட்சியினருடன் உள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக குமாரசாமி கூறுகையில் "காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லை மீறிப் போகின்றனர். அவர்களை அக்கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான் பதவி விலகவும் தயார்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், "முதலமைச்சராக குமாரசாமி இருப்பதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்" என மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.