தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக பதவி வகித்து வந்த ராஜகோபால் ஐ.ஏ.எஸ்  தலைமை தகவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தலைமை தகவல் ஆணையராக 3 ஆண்டுளுக்கு ராஜகோபால் ஐ.ஏ.எஸ், பதவி வகிப்பார்.  

தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஆய்வு செய்த தேடுதல் குழு, அதுதொடர்பான பரிந்துரைகளை முதலமைச்சர் தலைமையிலான தேர்வு குழுவுக்கு வழங்கியது.

இவர்களில் 3 பேரை இறுதி செய்வதற்கான கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் “பயோ டேட்டா ” விவரங்களை வழங்கவில்லை என கூறி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

 1984-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் உள்துறை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்த ஆனந்த்ராவ் விஷ்னு பாட்டீல் ஐ.ஏ.எஸ் தமிழக ஆளுநர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.