குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் தூண்டி விடுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. 

இந்த நிலையில் இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம்  ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தை நாங்கள் தூண்டிவிடுவதாக பாஜக கூறுவது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்தார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் முன்னெடுக்கிறது. இதற்கு மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பல தரப்பினரும் ஆதரவு அளிக்கின்றனர். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தேசிய மக்கள்தொகை பதிவேடுடன் நேரடி தொடர்புடையதே தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)

மக்கள் தொகை பதிவேட்டை மட்டும் தான் தயாரிக்கிறோம், என்.ஆர்.சி.யை அல்ல என ஏன் அவர்கள் சொல்ல மறுக்கிறார்கள்? காங்கிரஸ் ஆட்சியில் தேசிய மக்கள் தொகை பதிவேடு மட்டும் தான் தயாரிக்கப்பட்டது. 

2010-ல் மக்கள் தொகை பதிவேட்டை தயாரித்த போது அசாமில் குடிமக்கள் பதிவேடு இல்லை. 19 லட்சம் மக்கள் தற்போது பரிதவிப்பது போன்ற கசப்பான அனுபவம் காங்கிரஸ் ஆட்சியில் ஏற்படவில்லை என அதிரடியாக தெரிவித்தார்..