ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து அவரை கைது செய்ய சிபிஐ முயற்சி எடுத்தது. ஆனால் அவர் திடீரென தலைமறைவானார். 

பின்னர்  ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. சார்பிலும், அமலாக்கப்பிரிவு சார்பிலும் ‘லுக் அவுட்’ எனப்படும் தேடுதல் நோட்டீஸ் நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதே நேரத்தில் முன் ஜாமீன் பெற உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனுவை நாளைக்கு விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
.

இதையடுத்து திடீரென டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்கு வந்த சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தன் மீதோ அல்லது தனது குடும்பத்தைச் சேர்ந்த யார் மீதோ எந்த குற்றச்சாட்டும் இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கையில் தன் மீது குற்றம் சுமத்தப்படவில்லை என்றும் கூறினார். அத்துடன் சட்ட நடவடிக்கைக்கு பயந்து ஓடி ஒளியவில்லை என்றும், தான் சட்டத்தை மதிப்பதை போல் விசாரணை அமைப்புகளும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.

பின்னர்  ப.சிதம்பரம் தனது வக்கீல்களுடன் ஜோர் பாக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பின்னாலேயே துரத்திச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் வீட்டின் கேட் பூட்டப்பட்டதால் அவர்கள் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்றனர்.

உள்ளே சென்ற அதிகாரிகள் ப.சிதம்பரத்துடன் சுமார் 30 நிமிடம் பேசினார்கள். அதன்பிறகு அவரை கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான 73 வயது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு இருப்பது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இதைத் தொடர்ந்து சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்ட சிதம்பரத்துக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து அவரிடம் இரவு முழுவதும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ப.சிதம்பரம் இன்று சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. சார்பில் தனிக்கோர்ட்டில் அனுமதி கோரப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட உள்ளார். 2ஜி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் பல அரசியல் தலைவர்களை சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது இதே திஹார் சிறைக்கு அனுப்பி வைத்தார். தற்போது அவரே திஹார் சிறைக்கப்பட உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.