தமிழக வாழ்வுரிமை கட்சியினர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பூட்டுப்போடும் முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் வலுத்து வருகிறது. தமிழகம் கொந்தளித்துப் போயுள்ள இந்த நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. 

சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டியை நிறுத்த வேண்டும் என்றும், அல்லது வேறு மாநிலத்தில் போட்டி நடத்த வேண்டும் என்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டியை நிறுத்தினால் சர்வதேச அளவில் மக்களின் பிரச்சனையை எடுத்துச்செல்ல முடியும் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடைபெறக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து கூறி வந்தார்.

ஐபிஎல் போட்டி பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் திட்டவட்டமாக கூறியிருந்தது. இதனைத் தொடர்ந்து மைதானத்துக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்களுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்துக்கு திடீரென வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர்கள், சேப்பாக்கம் மைதானத்தை பூட்டுப்போடும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத நேரத்தில் இது நடைபெற்றதால் காவல் துறையினரால் விரைந்து அதை தடுக்க முடியவில்லை. 

பின்னர், போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்டக்காரர்கள், மது, சினிமா, ஐபிஎல் போன்றவற்றால் தமிழக மக்களை போதையில் வைத்திருக்கவே மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்றும், தமிழ் உணர்வுள்ளவர்கள் யாரும் ஐபிஎல்லை பார்க்க மாட்டார்கள் என்றும் கூறினார்.