சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சிற்றரசு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவி யாருக்குக் கிடைக்கும் என திமுகவில் விவாதங்கள் தொடங்கியது. அதன் கட்சி கட்டமைப்பில் மாவட்டச் செயலாளர் பதவிதான் வலைமை மிக்கது. எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் என்கிற பதவிகளைவிட வலிமையானது மாவட்ட செயலாளர் பதவி. அந்த வகையில், மாவட்ட செயலாளர் பதவியைக் கைப்பற்ற பலரும் குறி வைத்து வந்தனர். 

குறிப்பாக, ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வும் தலைமை நிலைய செயலாளருமான கு.க.செல்வம், அண்ணா நகர் எம்.எல்.ஏ. மோகன், மாணவரணியின் மாநில துணைச் செயலாளர் மோகன், அண்ணாநகர் பகுதி செயலாளர் பரமசிவம், உதயநிதியின் பேராதரவு பெற்ற சென்னை மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில், கடும் போட்டிகளுக்கு இடையே சென்னை மேற்கு மாவட்ட செயலாளரை மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மறைவெய்திய காரணத்தால், மாவட்டக் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு (118.60 முத்தையா தெரு, வெள்ளான தேனாம்பேட்டை, சென்னை 600086) அவர்கள் சென்னை மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் என திமுக தலைமை தெரிவித்துள்ளது.