சென்னை ஸ்டான்லி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மீண்டும் அங்கீகாரம்! அமைச்சர் மா.சு சொன்ன குட்நியூஸ்
சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மருத்துவ மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவ கல்லூரிகள் மூடப்படுவது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிகளில் சிசிடிவி, பயோமெட்ரிக் போன்ற குறைபாடுகள் சரி செய்யப்பட்டுள்ளன. மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு வரைவு ஒன்றிய அரசு அனுப்பியது. இதற்கு, கலந்தாய்வு மாநில உரிமை சார்ந்தது என குறிப்பிட்டு ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பபட்டது.
பொது கலந்தாய்வு இல்லை எனவும் மாநில அரசுகளே கலந்தாய்வு நடத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கையால் மாநில உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளது.