தமிழர்களின் உணர்வுகளை மதித்து சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என கோரிக்கை வைத்தும் அதனை மதிக்காத இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கண்டணம் தெரிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல் முருகன், எங்க ஸ்லீப்பர் செல்கள் சிதம்பரம் ஸ்டேடியத்துக்குள் புகுந்து போட்டிகளை நடத்தவிட மாட்டார்கள் என பதிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என தமிழக எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திருநாவுக்கரசு, திருமாவளவன்,வேல் முருகன் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த, சத்யராஜ் போன்றோரும் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

ஆனால் நாளை சிதம்பரம் ஸ்டேடியத்தில் கண்டிப்பாக போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கிரிக்கெட் வீரர்கள்  சென்னை அடையாறு ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல் முருகன், தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த விட மாட்டோம் என்றார். தங்களது கட்சி தொண்டர்கள் டிக்கெட் வாங்கி வைத்திருக்கிறார்கள்  என்றும் அவர்கள் உள்ளே சென்று  போட்டிகளை தடுத்து நிறுத்துவார்கள் என்றும் வேல் முருகன் தெரிவித்தார்.

உங்களால் முடிஞ்சா கிரிக்கெட் போட்டிகளை நடத்திப் பாருங்க என்றும் வேல் முருகன் சவால் விடுத்துள்ளார்.