உள்ளாட்சித் தேர்தலில் பாமகவிற்கு ஒரு மேயர் பதவியை கொடுப்பது என்று முடிவாகிவிட்ட நிலையில் அது எது என்கிற பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அதிமுக கூட்டணியில் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாமக, தேமுதிக மற்றும் பாஜகவுடன் அதிமுகவின் தனித்தனி குழு கடந்த ஒரு வாரமாகவே பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளன. இதில் பாமகவிற்கு ஒரே ஒரு மேயர் பதவி என்பது இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலும் மாநகராட்சிகள் அனைத்தும் தென்மாவட்டங்கள் மற்றும் கொங்குமண்டலத்தில் தான் உள்ளன. வட மாவட்டங்களில் மாநகராட்சிகள் இல்லை. பாமக வட மாவட்டங்களில் தான் பலமான கட்சி. எனவே சேலம் மாநகராட்சியை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிபந்தனை. ஆனால் முதலமைச்சரின் சொந்த மாவட்டமான சேலத்தில் உள்ள ஒரே மாநகராட்சியை பாமகவிற்கு கொடுக்க அதிமுக மறுத்து வருகிறது.

அதற்கு பதிலாக ஓசூர் மாநகராட்சியை தர அதிமுக முன்வந்துள்ளது. ஆனால் ஓசூர் மீது பாமகவிற்கு நாட்டம் இல்லை. சேலத்தை தர முடியாது என்றால் சென்னையை கொடுங்கள் என்று ராமதாஸ் அதிமுகவிற்கு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சொல்கிறார்கள். சேலம் கூட பரவாயில்லை ஆனால் தலைநகரை எப்படி பாமகவிடம் கொடுப்பது என்று அதிமுக யோசித்து வருகிறது.

அதே சமயம் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் சரி, இடைத்தேர்தலிலும் சரி, நாடாளுமன்ற தேர்தலிலும் சரி சென்னைக்கு உட்பட்ட தொகுதிகளில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. ஜெயலலிதா இருந்த 2016 தேர்தலிலேயே பெரம்பூர், ராயபுரம், தியாகராயநகர், விருகம் பாக்கம் என சில தொகுதிகளை தான் அதிமுகவால் வெல்ல முடிந்தது- எனவே சென்னையை வேண்டுமானால் பாமகவிற்கு கொடுத்துவிடலாம் என்கிற ஒரு பேச்சு அதிமுகவில் எழுந்துள்ளதாக கூறுகிறார்கள்.