அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. 

அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அதிமுக ஆட்சியில் சில காலம் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவா். அந்த காலக்கட்டத்தில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி செந்தில் பாலாஜி பலரிடமும் பண மோசடியில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாகச் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு வழக்கில் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்திருந்தது. இதுதொடர்பாக வரும் 13 ஆம் தேதி ஆஜராக செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

இதனிடையே அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 3 பேருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சண்முகம் 9 ஆம் தேதி தேதியும் செந்தில்பாலாஜி 13 ஆம் தேதியும் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த 3 வழக்குகளில் ஒன்றைத் தான் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.