உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தனக்கு எதிராக பேசக்கூடாது என அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை அவரே திரும்ப பெற்றதால் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்கட்டமைப்பு பணிகளை தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு  அமைச்சர் வேலுமணி வழங்கி வருகிறார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் அதிக ஊழல் நடந்து இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தமக்கு எதிராக அவதூறு பிரசாரம் செய்யும் ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும், ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கவும் கோரியும் அமைச்சர் வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்ளாட்சி துறை முறைகேடுகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு தடை கோரிய மனுவை திரும்ப பெறுவதாக அமைச்சர் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி சுப்பிரமணியன், வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.