புதுச்சேரி நகராட்சிகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்றுவதுடன் இரண்டு வார காலத்திற்குள் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி நகராட்சிகள் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்றுவதுடன் இரண்டு வார காலத்திற்குள் அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகையின்போது வைக்கப்பட்ட சட்டவிரோத பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் இருப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில், நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்கக்கூடாது, அப்படி மீறி பேனர்கள் வைத்தால் அது சட்டவிரோதமாக கருதப்படும் என்றும், பேனர் வைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதானல் பொது இடத்தில் பேனர் வைப்பதற்கு காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது, இது ஒருபுறமிருக்க கடந்த மாதல் 24 ஆம் தேதி புதுச்சேரிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்திருந்தார். அப்போது அவரை வரவேற்ற அரசு சார்பாகவும், பாஜக அரசியல் கட்சி சார்பாகவும் ஏராளமான பேனர்கள் அனுமதியின்றி சட்டவிரோதமாக வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பேனர்கள் அகற்றப்படாமல் இருந்தன. இதனால் புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகநாதன் இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டது. அந்த பேனர்களை அகற்ற ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடன் அதை அகற்றுவதற்கான செலவு தொகையை பேனர் வைத்தவர்களிடமிருந்தை வசூலிக்க வேண்டும் என நகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் கூட அந்த பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளன என்று ஜனநாதன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆனந்தி அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்தது.

புதுச்சேரியில் சட்டவிரோதமாக 2500 பேனரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை ஒப்பந்த முறையில் ஒப்பந்ததாரர்கள் வைத்துள்ளதாகவும், ஒப்பந்ததாரர்கள் வைக்கப்பட்ட பேனர்கள் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டதாகவும், ஆனால் அரசியல்வாதிகளால் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரங்களும், மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது, இதனையடுத்து சட்டவிரோதமாக பேனர் வைப்பது, உச்ச நீதிமன்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், அந்த பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்றும், அவற்றை அகற்றி இரண்டு வாரங்களில் அவைகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.