திருப்பத்தூரில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது 3 மாதத்திற்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   திரிபுராவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் லெனின் சிலை ஒன்று அப்புறப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜக  தேசிய செயலாளர் எச். ராஜா " லெனின் சிலை உடைபடுவது போல் பெரியார் சிலைகள் உடைக்கப்பட வேண்டும்" என்று ட்விட்டரில் பதிவிட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி  திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில்  முத்துராமன், சிலம்பரசன் என்பவர்கள் சிலையை சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பொதுமக்கள் இவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.குற்ற எண் 44/2018ல் 294 (b),153 (A), 506 (2) IPC மற்றும் பிரிவு 4 TNPPDL சட்டப்படி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டு பின்பு ஜாமீனில் விடுதலையானார்கள். இந்த வழக்கில் கடந்த 23 மாதங்களாக குற்றப்பத்திக்கையை திருப்பத்தூர் நகர காவல் நிலையம் தாக்கல் செய்யவில்லை என்றும் உரிய காலக்கெடுவுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய புகார்தாரரும் திருப்பத்தூர் நகர தி.க. அமைப்பாளருமான ம. இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  

அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ். குமார தேவன் ஆஜராகி 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இன்னும் குற்றப் பத்திரிக்கையை போலீஸ் தாக்கல் செய்யவில்லை என்று வாதிட்டார். அரசு வழக்கறிஞர் 3 மாதத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விடுவோம் என்று கூறினார். இன்று இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி பி.ராஜமாணிக்கம் 3 மாதத்திற்குள் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய திருப்பத்தூர் நகர போலீசுக்கு உத்தரவிட்டார்.