தூத்துக்குடி மக்களவை தேர்தல் தொடர்பாக கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவர் சுமார் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்தார். இந்நிலையில், திமுக எம்.பி, கனிமொழி வெற்றியை எதிர்த்து அத்தொகுதி வாக்காளர் சந்தான குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கனிமொழி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன், மனு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வாக்காளர் சந்தானகுமார் தரப்பில் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யப்பட்டது. கனிமொழி தரப்பில் எழுத்துபூர்வ வாதங்களை நாளை தாக்கல் செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து, இதை பதிவு செய்த நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி கனிமொழியின் மனு மீது நாளை உத்தரவு பிறக்கப்படும் என தெரிவித்தனர். 

இந்நிலையில், திமுக எம்.பி.கனிமொழி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கனிமொழியின் கோரிக்கை நிராகரிப்பால் வெற்றியை எதிர்க்கும் சந்தானகுமார் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.