தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெற்றதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழசை சவுந்தரராஜன் வழக்கு தொடர்ந்துள்ளார். 

தமிழகத்தில் நடத்து முடிந்த மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக மெகா கூட்டணி அமைத்தும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மட்டும் தேனி தொகுதியில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட்டு சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்தார். இதனிடையே, தேர்தல் வெற்றியை எதிர்த்து 45 நாட்களுக்குள் வழக்கு தொடர வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேபோல், சாத்தூர் அதிமுக எம்எல்ஏ வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டு ஓரிரு வாரங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

 

இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஆர்த்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். மேலும், குறைபாடான வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.