அதிமுக அலுவலக சீலை அகற்றக்கோரிய வழக்கு... தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!!
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த இரு வழக்குகளும் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, சீல் வைத்த உத்தரவை எதிர்க்கிறீர்களா? ஆதரிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஓபிஎஸ் தரப்பில், எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: பொன்னையனுக்கு வேட்டு வைத்த நாஞ்சில் கோலப்பனுக்கு எடப்பாடி ஆப்பு ... ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்றும் நீக்கம்.
இந்த நிலையில், இந்த வழக்கில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி காலை முதல் நடந்த சம்பவங்களை வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் பொது அமைதி, பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியமாக கருதப்படுகிறது. பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் சீல் வைக்கப்பட்டது. போலீசார் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. வன்முறை சம்பவத்திற்கு பின்னர் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் உதவியுடன், போலீஸ் வாகனத்திலேயே கற்கள், பெட்ரோல் குண்டுடன் வந்தார் ஓபிஎஸ்... பன்னீர் மீது பகீர் புகார்.
மேலும் அதிமுக தலைமை அலுவலகம் யாருக்கும் சொந்தம் என்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அதிகாரியையோ சிவில் நீதிமன்றத்தையோ அணுகலாம் என்று நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன. இன்னமும் இரு தரப்பினர் இடையே எந்த சமாதானமும் ஏற்படவில்லை. அப்படி இருக்கும்போது சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரைக்கும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்த அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.