தமிழ்நாடு அரசால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாட்டு  தளர்வுகளுடன் இங்கு உள்ள தொழில் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க நிறுவனங்களைச் சார்ந்த பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:- தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவு மற்றும் ஆலோசனைகளின் படி பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் பொது மக்களின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்  ஒரு பகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள், கொரோனா பாதுகாப்பு மையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தும் மேலாண்மை திட்டம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகமூடி அணிதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 6-7-2020 முதல் பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மென்பொருள் நிறுவனங்கள் தனியார் அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்கள், ஷோரூம்கள், (வணிக வளாகங்கள் தவிர்த்து) மற்றும் பெரிய கடைகள், நகை, ஜவுளி போன்றவை, உணவகங்கள் (பார்சல் சேவை மட்டும்) வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகள், காய்கறி மளிகை கடைகள், சலூன் கடைகள், மீன், இறைச்சி அங்காடிகள் மற்றும் வங்கிகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ள நிலையில் இவ்விடங்களில் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது முக்கியமானதாகும், பாதுகாப்பு நடைமுறைகளை ஒழுங்குப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியால் மேற்குறிப்பிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வியாழக்கிழமை 9-7 2020, வெள்ளிக்கிழமை 10-7-2020, சனிக்கிழமை 11-7-2020 ஆகிய நாட்களில் ஆணையர் அவர்களின் தலைமையிலும், துணை ஆணையாளர் அவர்களின் முன்னிலையிலும், தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி தலைமையகத்தில் நடைபெற உள்ளது. 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் கடைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து கடிதம் வாயிலாக தெரிவிக்கப்படும் எனவே கடிதம் பெற்ற நிறுவனங்களின் முக்கிய பிரதிநிதிகள் தங்களுக்கு குறிப்பிட்டுள்ள நாட்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவே குருணை வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் முகமூடி அணிதல் அடிக்கடி சோப்பு கரைசல் கொண்டு கை கழுவுதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.