தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக ராக்கெட் வேகத்தில்  அதிகரித்து வருகிறது.இதன் வேகம் இந்தியாவில் தமிழகத்தில் தான் கொரோனா முதலிடம் பிடிக்கும் என்கிற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

கொரோனாவால் நேற்று பாதிக்கப்பட்ட 1,286 பேரில் 1,012 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் நேற்று முதன் முதலாக கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 598 ஆக அதிகரித்து இருக்கிறது.தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 11 பேர் பலி. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.நேற்று உயிர் இழந்த 11 பேரில் 8 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 பேரும், திருச்சியில் 70 வயது பெண் ஒருவரும் உயிர் இழந்து இருக்கிறார்கள்.என்றாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் கொரோனாவால் உயிர் இழப்பவர்களின் சதவீதம் குறைவாகவே உள்ளது.

சென்னையில் தலைமைச் செயலகம் உள்பட தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களை கொண்டு கடந்த மே 18-ந் தேதி முதல் இயங்கி வருகின்றது. அரசு ஊழியர்கள் அனைவரும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் உள்ள பொதுக்கணக்கு குழு பிரிவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த அலுவலகம் மூடப்பட்டது.ஆனால் அங்கு கொரோனா பரவல் தொடர்ந்து நீடித்தது. இதுவரை 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்-அமைச்சரின் செயலாளர் பிரிவில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஊழியர் என 2 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழ் வளர்ச்சித்துறை, செய்தித்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர் 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் அலுவலக உதவியாளர், பிரிவு அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட பணியில் இருப்பவர்கள்.இவர்களில் சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பலர் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 44 வயதான அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் "வெண்டிலேட்டர்" மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.சென்னை போலீசில் ஏற்கனவே ஒரு கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள், 7 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள், 50-க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள் என 380 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.