சென்னையில் இன்று மாலை 3 மணி முதல் அனைத்து கடற்கரைகளையும் மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது .  சென்னை மெரினா கடற்கரை,   பெசன்ட் நகர் ,  பாலவாக்கம் ,  திருவான்மியூர் ,  உள்ளிட்ட  அனைத்து கடற்கரைகளும்  மூடப்படும்  என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  இந்தியாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது .  இதுவரை இந்தியாவில் 271 பேர் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது . இந்நிலையில்  நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள்  மேற்கொண்டு வருகின்றன. 

குறிப்பாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது .  அரசு அலுவலகங்கள்,   பள்ளிக்கூடங்கள் ,  வணிக வளாகங்கள் ,  திரையரங்குகள் என பொதுமக்களுக்கு விடுமுறை வழங்கி வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி அரசு அறிவுறுத்தியுள்ளது.   ஆனால் தங்களுக்கு கிடைத்துள்ள விடுமுறைகளை மகிழ்ச்சியாக பயன்படுத்துகிறோம் என்ற பெயரில்  பலர் கடற்கரை உள்ளிட்ட பொது இடங்களில் கூடுவது,   வணிக வளாகங்களுக்கு படையெடுப்பது என அத்து மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஏற்கனவே இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசு அறிவித்துள்ள .

 

இந்நிலையில் தற்போது சென்னையில் உள்ள மெரினா கடற்கரை,  பெசன்ட் நகர் ,  திருவான்மியூர், பாலவாக்கம்,   உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளையும் மூடுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது .  (நாளை) 22 ஆம் தேதி மக்கள் தாங்களாகவே வீடுகளில் அடங்கி ,  ஊரடங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டுள்ள   நிலையில் சென்னை மாநகராட்சி இந் நடவடிக்கை எடுத்துள்ளது .  இதனால் மக்கள் கடற்கரையில் கூட்டமாக ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க முடியும் .  அதையும்  மீறி யாரும் கடற்கரைக்கு வரவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ள சென்னை மாநகராட்சி,   மக்கள் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது .