முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகளுமான செல்வியின் மருமகன் ஜோதிமணி பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது.  இதனிடையே, ஜோதிமணியின் நடவடிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி அவசர அவசரமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு ஜாகீர் அகமத் தமான் என்பவர் சென்னை சவுகார் பேட்டையில் உள்ள முக அலங்கார வியாபாரியான தினேஷை சந்தித்தார். அப்போது, தனக்கு தெரிந்த நபரிடம் ரூ.80 லட்சம் மதிப்பிலான 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்தால் 100 ரூபாய் நோட்டுகளாக 1 கோடி வாங்கி தருவதாக தினேஷிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய தினேஷ், சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை சன்ரைஸ் அவென்யூவில் உள்ள வீட்டில் 80 லட்சம் பணத்துடன் சென்றார்.

அங்கு ஜாகீர் அகமத் தனது நண்பர்கள் சிலருடன் வந்துள்ளார். தினேஷிடம் உங்கள் பணத்தை முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பெட்டியை வாங்கிப் பக்கத்து அறைக்குள் சென்றுள்ளார். ஒரு மணி நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த தினேஷ் தரப்பினர் அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அறைக்குள் பணப்பெட்டியுடன் சென்றவர்கள் ஜன்னலைக் கழற்றி வெளியே தப்பிச்சென்றது கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக முக அலங்காரப் பொருட்கள் வியாபாரி தினேஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் ஜோதிமணி உட்பட 6 பேரிடம் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், ஜோதிமணி ஏற்கனவே பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்த மோசடி புகாரில் சிக்கிய டாக்டர் ஜோதிமணி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகள் செல்வியின் மருமகன் என்பதால் மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுக்கும் ஜோதி மணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கருணாநிதி மகள் செல்வி மற்றும் அவரது கணவர் செல்வம் இருவரும் முரசொலி நாளிதழில் விளம்பரம் செய்துள்ளனர்.