கடந்த வாரம் அரவக்குறிச்சித் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின்  வேட்பாளர் மோகன் ராஜை ஆதரித்துப் பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் பெயர் நாதுராம் கோட்சே என்றும் தெரிவித்தார். அவரது பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது என பிரதமர் மோடி கமலுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கமல்ஹாசனின் நாக்கு அறுக்க வேண்டும் என பேசினார்.

கமல்ஹாசன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், கடந்த இரண்டு நாட்ளாக தேர்தல் பிரச்சாரத்தை அவர் ரத்து செய்தார். இந்நிலையில் கமல் இன்று திருப்பரங்குன்றம் தொதகுதியில் போட்டியிடும் மநீம கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது  பேசிய  கமல்ஹாசன், தீவிர அரசியலில் இறங்கிய நாங்கள், தீவிரமாகத்தான் பேசுவோம்; யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசுவதில்லை; ஆனால் சரித்திர உண்மையை பேசினால் புண்ணாகும் என்றால் அதை ஆற்ற வேண்டும் என்று பாஜக தலைவர்களின் விமர்சனத்திற்கு பதிலளித்தார்.

அதனைத்தொடர்ந்து, தங்கும் விடுதிக்கு சென்று விட்டார். அங்கு, சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. பின்னர், மேல அனுப்பானடியில் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், இரு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார். 

அதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கமல்ஹாசன் மேடைக்குச் சென்றபோது, அவரை நோக்கி காலணி வீசப்பட்டது. அதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கமலை நோக்கி காலணியை வீசியை பா.ஜ.கவைச் சேர்ந்த இளைஞர்கள் பத்துக்கும் மேற்பட்டோரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனால், கமலின் பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.