முதலமைச்சர் ஜெயலலிதா, ஓரிரு நாட்களில் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அவ்வப்போது சொந்த ஊருக்கு சென்றாலும், அடிக்கடி சென்னை வந்து முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையொட்டி முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 நாட்களாக ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்ந்து இருந்தால், ‘டிரக்கியாஸ்டமி’ சிகிச்சை முறையில் மேற்கொள்ளப்படும் செயற்கை சுவாச சிகிச்சையை மாற்றும் வகையில், தொண்டையில் மூச்சு விடுவதற்காக பொருத்தப்பட்டுள்ள குழாயை எடுத்துவிட்டு, அவரை இயற்கையாகவே சுவாசிக்க செய்யலாம் என மருத்துவ குழுவினர் கூறுகின்றனர். மேலும், ஒரிரு நாட்களில், அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
