மாநகராட்சி இளநிலை உதவியாளர்களின் கல்வித் தகுதியில் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் பணியாற்றி வருகின்ற இளநிலை உதவியாளர்களின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு  என்று உள்ளது. ஆனால், மாநகராட்சிகளில் பணியாற்றி வருகின்ற இளநிலை உதவியாளர்காளின் கல்வித் தகுதியில் மட்டும், +2 மற்றும் தட்டச்சு தேர்ச்சி என்று உள்ளது. இதனை மாற்றம் செய்யக்கோரி கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

நகராட்சி நிர்வாக ஆணையாளராக முனைவர்.க.பாஸ்கரன் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக, கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதியன்று தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.இதனை அடிப்படையாக கொண்டு நகராட்சி நிர்வாக ஆணையர் க.பாஸ்கரன், தனது கடிதம் எண் நக 7885/2019/ MCS-1 நாள் 20-11-2019 ன் படி பரிந்துரை செய்ததின் அடிப்படையில், அரசு மாநகராட்சி இளநிலை உதவியாளர்காளின் கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு  மட்டும் என்ற வகையில் 1996ம் வருடத்திய பணிவிதியினை திருத்தி அரசாணை 87 MAWS நாள்19-8-2020 ஐப் பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணைக்கு தமிழ்நாடு மாநில அனைத்து மாநகராட்சி அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. 12 ஆண்டுகளாக எங்களது கோரிக்கைக்கு கடந்த ஆட்சியாளர்கள் செவி சாய்க்காத நிலையில், தாங்கள் மனு அளித்த உடனே, அதனை கவனத்தில் எடுத்து, நிறைவேற்றிக் கொடுக்க உறுதுணையாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள்.