ஆந்திராவில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பரம எதிரியான காங்கிரஸுடன் தெலுங்கு தேசம் கைகோத்ததுபோல, இந்தக் கூட்டணியை எதிர்க்க தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, ஜெகன் மோகன் கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுடன் கைகோக்க திட்டமிட்டுள்ளது.

ஆந்திராவில் நாடாளுமன்றத்தோடு சேர்த்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த காலங்களில் தொடர்ச்சியாக சந்திரபாபு நாயுடு ஆட்சியைத் தக்கவைத்த வரலாறு உண்டு. இந்த முறையும் அதற்காக பல முயற்சிகளை செய்துவருகிறார். ஆனால், காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தெலுங்கு தேசத்தின் பரம எதிரியான காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

அதே நேரத்தில் இந்தக் கூட்டணியால் தெலங்கானாவில் சந்திரசேகர் ராவை வீழ்த்தவும் முடியவில்லை. தெலங்கானாவில் சந்திர சேகர ராவ் மீண்டும் முதல்வராகிவிட்டார். தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸுடன் சேர்ந்து சந்திரபாபு நாயுடு, சந்திர சேகர ராவை கடுமையாகத் தாக்கி பிரசாரம் செய்தார். அப்போதே, ‘சந்திரபாபுவுக்கு பதில் பரிசு தருவேன்’ என்று சந்திர சேகர ராவ் தெரிவித்திருந்தார். அதன்படி ஆந்திராவில் சந்திர பாபுவுக்கு கடும் போட்டியைத் தரும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயாராகிவருகிறார் சந்திரசேகர ராவ்.

இதற்காக சந்திர சேகர ராவின் மகனும் அக்கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் ஜெகன் மோகனை சந்தித்துப்பேசினார். காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக அமைக்கும் மூன்றாவது அணியில் சேருமாறு சந்திர சேகர ராவ் சார்பில் அவரது மகன் ஜெகன் மோகனுக்கு அழைப்புவிடுத்தார். கூட்டணியில் சேரும்படி சந்திர சேகர ராவும் போன் மூலம் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பேசியிருக்கிறார். இரு கட்சிகளும் கணிசமாக வெற்றி பெற்றால், மத்தியில் முக்கிய அங்கம் வகித்து, ஆந்திரா, தெலங்கானா என இரு மாநிலங்களின் வளர்சிக்கும் உதவலாம் என்று பேசப்பட்டிருக்கிறது. விரைவில் நல்ல முடிவை எடுக்க இரு தலைவர்களும் சம்மதித்துள்ளனர்.