தெலங்கானாவில் தெலங்கான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. அங்கு முதல்வராக டிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் உள்ளார். முதல்வர் சந்திரசேகர் ராவ்  ஐதராபாத்தில் உள்ள அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். இந்த பங்களாவில் 9 செல்ல நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நாய்களை ஆசிப் அலி என்பவர் பராமரித்து வருகிறார்.

 இதில் 11 மாதங்களான ‘ஹஸ்கி’ வகையை சேர்ந்த நாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலைக் குறைவு ஏற்பட்டு, மோசமானது. சைவம் மட்டுமே சாப்பிடும் இந்த குட்டி நாயால் பால் கூட குடிக்க முடியவில்லை. மூச்சு விடவும் சிரமப்பட்டது.

இதனால் அந்த நாயை பராமரிக்க வந்த ஆசிப் அலி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சரா ஹில்சில் இருக்கும் தனியார் கால்நடை மருத்துவனைக்கு சிகிச்சைக்காகக் ஹஸ்கி நாயைக் கொண்டு சென்றார். அங்கு பணியில் இருந்த கால்நடை மருத்துவர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நாய் இறந்துவிட்டது.

இதையடுத்து ஆசிப் அலி, பஞ்சரா ஹில்ஸ் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் மருத்துவர்கள் கவனக்குறைவாக சிகிச்சைகள் அளிக்காததால் தான் செல்ல நாய் இறந்து விட்டது. இதற்கு காரணமான கால்நடை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

இதையடுத்து போலீஸார் கால்நடை மருத்துவர்கள் லட்சுமி, ரஞ்சித் ஆகியோர் மீது ஐபிசி 429 மற்றும் மிருகவதை தடுப்பு சட்டப்பிரிவு 11(4) ஆகிய 2 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

இதற்கிடையே நாய் இறந்தற்கு கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸாரையும்,மாநில அரசையும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், பாஜக கடுமையாக கண்டித்துள்ளன.

பாஜக செய்தித்தொடர்பாளர் கிருஷ்ணா சாஹர் கூறுகையில்,” தெலங்கானாவில் டெங்கு காய்ச்சல் பரவி மக்கள் உயரிழந்துவருகிறார்கள், இதற்கு காரணமான கேசிஆர் அரசு பதில் அளிக்கவில்லை. நாய் இறந்ததற்கு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறது. வாழ்த்துக்கள் முதல்வரே, குழந்தைகள்மீது சிறிதுபாசம், கனிவு இருந்தால்கூட, குழந்தைகளை டெங்கு காய்ச்சலில் உயிரழக்கவிடமாட்டீர்கள்” என கண்டித்துள்ளார்.

கடந்த 2 வாரங்களில் மட்டும் தெலங்கானாவில் 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் உயிரிழந்து வருகின்றனர், ஆனால், மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலால்தான் உயிரிழப்பு நேர்ந்தது என்று சான்று வழங்க மறுக்கிறார்கள்.