தமிழகத்தில் நாடகம் நடத்துவதுபோல், பாஜகவால் ஆந்திராவில் நடத்த முடியவில்லை என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்குதேசம் கட்சி, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய பாஜக அரசு அலட்சியம் காட்டியதால், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தற்போது கடுமையாக எதிர்த்துவருகிறது. 

அண்மையில் ஜனசேனா கட்சியின் ஆண்டுவிழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் மீது சரமாரியாக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினார்.

இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, என் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை ஆசிர்வாதமாகவே பார்க்கிறேன். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் என் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இந்த குற்றசாட்டுகளை அவராக முன்வைக்கவில்லை. அவர் பேசியிருப்பது அவரது சொந்த பேச்சு அல்ல. டெல்லியில் இருந்து பாஜக எழுதிக்கொடுத்த உரையைத்தான் அவர் படித்து இருக்கிறார். பவன் கல்யாணின் அனைத்து குற்றச்சாட்டுகளின்  பின்புலத்தில், பாஜக இருக்கிறது.

தமிழகத்தில் பாஜக நடத்தும் நாடகம் போல் ஆந்திராவில் நடத்த நினைக்கிறது. அதுபோன்ற நாடகத்தை ஆந்திராவில் நடத்த முடியவில்லை என விமர்சித்தார்.

தமிழகத்தை பாஜக மறைமுகமாக ஆட்சி செய்கிறது எனவும் மத்திய பாஜக அரசின் எண்ணங்களுக்கும் உத்தரவுக்கும் ஏற்ற வகையில்தான் முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு செயல்படுகிறது என்றும் தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தமிழக எதிர்க்கட்சிகளை கடந்து தற்போது அப்படியான விமர்சனத்தை அண்டை மாநிலமான ஆந்திர முதல்வரே முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் மீதான ஆந்திர முதல்வரின் மதிப்பீட்டையும் அவரது இந்த பேச்சு வெளிச்சம் போட்டு காட்டுகிறது.