போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிகப்படியாக அபராதம் விதிக்க வழிவகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த 1 ஆம் தேதி  முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தும் அபராத தொகையை குறைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் இந்த புதிய சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேற்குவங்க முதலமைச்சர்  மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் அறிவித்திருந்தனர்.

தற்போது அவர்கள் இருவரைத் தொடர்ந்து தெலங்கானா  முதலமைச்சர் சந்திரசேகர ராவும் புதிய சட்டத்தை அமல்படுத்த மறுத்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகர ராவ், மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்றார். 

எங்களுக்கென தனிச்சட்டம் கொண்டு வருவோம். கடுமையான அபராதத்தை விதித்து மக்களை வதைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை  என்றும் சந்திரசேகர ராவ் தில்லாக தெரிவித்துள்ளார்.