சிபிஐ அமைப்பு தங்கள் மாநிலத்தில் விசாரணை நடத்தக் கூடாது' என ஆறு மாதங்களோ ஒரு வருடமோ தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் சிபிஐக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் சிபிஐ அதிகாரிகள்மீது தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதால், தடைவிதிக்கப்பட்டதாகக் காரணம் கூறப்பட்டது.இந்நிலையில், கடந்த மே 30-ம் தேதி, ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் அரசு விதித்த அரசாணையை ரத்துசெய்து, ஆந்திராவில் சிபிஐ நுழைய அனுமதி அளித்து, புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். 

இது சந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அமராவதியைப் புதிய தலைநகர் ஆக்கும் திட்டத்தில் சந்திரபாபு நாயுடு கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார் என்பதுதான் ஜெகனின் முதல் குற்றச்சாட்டாக இருந்தது. அது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்படும் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2013-ம் ஆண்டு மே மாதம், சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ், முதன்முறையாக அரசியலில் காலடி எடுத்துவைத்தார். அதன் பிறகு அவர் ஆந்திராவில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு, முதலீடு என்ற பெயரில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, இல்லாத நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, ரூ.21,000 கோடி மோசடி செய்ததாக லோகேஷ் மீது பொது நலன் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு ஜெகன் உத்தரவிட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகனும் வசமாக சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்டுகிறது.

சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த காரணத்தால், அவரின் பங்குக்கு இன்னும் கொஞ்சம் அதிகமான ரெய்டுகள் நடக்கும் என்றும் பேசப்படுகிறது. இதனால், நாயுடுவின் மொத்த குடும்பமும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.