அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளில் இருந்து ஒவ்வொரு கட்சியிலும் ஒருவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி தர முடிவு பாஜக மேலிடம் முடிவு எடுத்துள்ளது. ஆகையால் மத்திய அமைச்சரவையில் ஓபிஎஸ் மகன் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் வென்று தொடர்ந்து 2-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. இதில் சிவசேனா (22), ஐக்கிய ஜனதா தளம் (16), லோக்ஜனசக்தி (6), அகாலிதளம் (2), அதிமுக (1) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு 50 இடங்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இன்று இரவு 7 மணிக்கு பதவியேற்கிறது. பாஜக கட்சிக்கு தனிப்பெருபான்மை கிடைத்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். 

இதன்படி  சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், லோக்ஜனசக்தி, அகாலிதளம் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கிடைப்பது உறுதியாகிவிட்டது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தேனி தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றார். இதனால் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற தன் மகனுக்கு அமைச்சர் பதவி தந்தே ஆக வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டு வந்தார். மறுபுறம் வைத்தியலிங்கத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்று எடப்பாடி தரப்பிலிருந்து பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவருக்கும் நிறைய பனிப்போர்கள் நடந்து வரும்நிலையில், மத்திய அமைச்சர் பதவியை வைத்து மேலும் விரிசல்கள் விரிவடைந்து வருகின்றன. 

இந்நிலையில் கூட்டணி கட்சிகளிலும், ஒருவருக்கு மட்டுமே மத்திய அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என சிவசேனா கட்சி செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தகவல் கூறியுள்ளார். அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், ஜெயலலிதா இருந்த போது ஐவர் அணியில் இருந்த வைத்திலிங்கம் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளது அவர் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலிலேயே தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க முடியாமல் இருந்து வந்த ஓபிஎஸ், தற்போது தன் மகனுக்கு அமைச்சர் வாங்கி கொடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.