‘கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தாரை வார்த்து கொடுக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது அதை மீட்க பேசி வருகிறார்கள்’ என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை அமைச்சர் எல். முருகன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ' கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தாரை வார்த்து கொடுக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது அதை மீட்க பேசி வருகிறார்கள்.

மீன்வள துறைக்கு முதன் முறையாக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதில் ரூ. 20 ஆயிரம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கடல்பாசி வளர்ப்பதற்காக முதன் முறையாக தமிழகத்தில் சிறப்பு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதற்கான இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து வருகிறது.மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ஆயிரத்து 500 ரூபாய் வழங்குகிறது.

மீனவர்களுக்கு குரூப் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. மத்திய அரசு திட்டங்களால் அதிகம் பயன் பெறும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. முத்ரா கடன் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம், அதிக சாலை வசதி என பல்வேறு திட்டங்களால் தமிழகம் பயன் பெற்று வருகிறது. கவர்னரின் தேநீர் விருந்தை முதல்வர் மு.க ஸ்டாலின் புறக்கணித்தது தமிழையும், பாரதியாரையும் புறக்கணித்ததற்கு சமமாகும்’ என்று கூறினார்.
