எந்த பிரச்சினையுமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக விரும்புவதாகவும் பாஜகவின் பிரச்சாரத்திற்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்குமேயானால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கூறி நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.
பாஜகவின் பிரச்சாரத்திற்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்குமேயானால் மத்திய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி சட்ட ஒழுங்கு சரியில்லை என நடவடிக்கை எடுக்க முடியும் என பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதன் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் மறுபுறம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையும் அது நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இந்த விமர்சனத்தை அதிமுகவை காட்டிலும் பாஜக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இது மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன் வைத்து வருகிறார்.திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், ஆட்கடத்தல், பழிவாங்கும் கொலைகள், கூலிப்படை கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என பாஜக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது.

இது ஒரு புறமிருக்க பள்ளி மாணவி தற்கொலை விவகாரம், மற்றும் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு பொன்றவை தமிக பாஜகவுக்கு இடையேயான மோதலை அதிகரிக்கச் செய்துள்ளது. நகர் புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார்த்தில் திமுகவை குறிவைத்து ஒருபுறம் அதிமுக, மறுபுறம் பாஜக திமுகவை கடுமையான விமர்சித்து வருகின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக அதிமுக தமிழக மாணவர்களுக்கு எதிராக செயல்படுவதாக திமுக எதிர் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில்தான் பாஜக தலைவர் எச்.ராஜா சட்ட ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை கடுமையாக எச்சரித்துள்ளார். அதாவது சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஹெச் ராஜா,
உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மக்களோடு கூட்டணி எடுத்த முடிவு நம்பிக்கை தரக் கூடியதாக உள்ளது என்றும், செல்லும் இடமெல்லாம் பாஜக வேட்பாளர்களை மக்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாகவும், எத்தனை இடங்களை கைப்பற்ற முடியும் என்பது தெரியவில்லை ஆனால் ஒரு தாக்கத்தை பாஜக ஏற்படுத்தும் என்பது உண்மை என அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து மக்களின் உயிரை காப்பாற்றிய அரசு மோடி அரசு என்றும் உயிர் காத்த மோடிக்கு ஒரு முறை ஓட்டு போடுங்கள் என மக்களிடம் கேட்டேன் அவர்கள் ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் போடுவோம் என கூறியதாக கூறினார்.

மேலும் பாஜகவின் வளர்ச்சியைப் பொருத்து கொள்ள முடியாத திமுக பாஜக மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் திமுகவிற்கு இணையான பலம் பாஜகவுக்கு உள்ளது என்றும், எந்த பிரச்சினையுமின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக விரும்புவதாகவும் பாஜகவின் பிரச்சாரத்திற்கு திமுக முட்டுக்கட்டையாக இருக்குமேயானால் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை என கூறி நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும் தமிழகம் என்பது பெரியார் மண் அல்ல என்றும் ஆன்மிக பூமி என்றும் கூறிய அவர், பாஜக ஹிஜாப்பை எதிர்க்கவில்லை, பள்ளி சீருடையை தான் ஆதரிக்கிறோம் எனவும், நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி, ஒரு சில அரசியல் கட்சிகள் ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
