2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு வழக்கமான மக்கள்தொகை கணக்கெடுப்பாகவே நடத்தப்படும்; அதில் பிற பிற்படுத்தப்பட்டோர் குறித்த விவரங்கள் எதுவும் சேகரிக்கப்படாது என்றும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 2021 கணக்கெடுப்பு ஓபிசி கணக்கெடுப்பாக நடத்தப்படும் என உறுதி அளித்திருந்த மத்திய அரசு, அதிலிருந்து பின்வாங்குவது சமூகநீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மராட்டிய சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு பதில் அளித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் விவேக் ஜோஷி எழுதியுள்ள கடிதத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினர் உள்ளிட்டோரின் தகவல்களை மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சேகரிப்பது அதன் தரத்தை பாதிக்கும். எனவே, 2021 மக்கள்தொகை கனக்கெடுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சமூக, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வகுப்பினர், பிற சாதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது. மக்கள்தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கவிருப்பதால், அதற்கு முன் இதை தெளிவுபடுத்த மத்திய அரசு விரும்புகிறது’’ என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்கனவே அது அளித்திருந்த வாக்குறுதிக்கு எதிரானதாகும். 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுடன் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி ஆலோசனை நடத்திய அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த விவரங்கள் சேகரிக்கப் படும் என அறிவித்தார். இது அறிக்கையாகவே வெளியிடப்பட்டது. அந்த வாக்குறுதியை காப்பாற்றாமல், இப்போது பொதுவான கணக்கெடுப்பு தான் நடத்தப்படும் என்று மத்திய அரசு கூறுவது நியாயமல்ல.

ஓபிசி கணக்கெடுப்பு நடத்த முடியாததற்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் அளித்துள்ள விளக்கம் மிகவும் அபத்தமானது ஆகும். ‘‘மத்திய அரசு ஆவணங்களின்படி இந்தியாவில் மொத்தமாக 6285 சாதிகள் மட்டும் தான் உள்ளன. ஆனால், மாநில அரசுகள் தயாரித்துள்ள பட்டியலில் 7200 சாதிகள் உள்ளன. இந்த சூழலில் ஓபிசி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும்’’ என்று மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர் கூறியிருக்கிறார். உண்மையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோருவதன் நோக்கமே இந்த குழப்பங்களை களைவதற்காகத் தான் என்ற உண்மையை கணக்கெடுப்பு ஆணையர் புரிந்து கொள்ளாதது தான் மிகவும் வருத்தமளிக்கிறது.

இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக முதன்முதலில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு 1955-ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை 2,399; அவற்றில் 837 சாதிகள் மிகப் பிற்படுத்தப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் எண்ணிக்கை 3,743 என்று மண்டல் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய குழப்பங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்பட்டதில் இருந்து கடந்த 80 ஆண்டுகளாகவே நீடிக்கின்றன. மீண்டும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தான் இந்த குழப்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்பது தான் உண்மை.

இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும். இது மத்திய அரசுக்கு தெரியும் என்றாலும், அதை திட்டமிட்டே மறைக்கிறது. இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது, தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்படுவது ஏன்? என்ற வினாவுக்கு விளக்கமளித்த உள்துறை அமைச்சகம், ‘‘மக்கள்தொகை கணக்கெடுப்பில் முழுமையான விவரங்கள் கிடைக்காது. கூடுதல் விவரங்களை திரட்டுவதற்காகத் தான் தேசிய மக்கள்தொகை பதிவேடு தயாரிக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளது. இதே காரணத்திற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்துகிறது.

இட ஒதுக்கீடு மட்டுமின்றி, சமூக பாதுகாப்பு திட்டங்களின் பயன்களும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்குவதற்கான அடிப்படையே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பதை சர்ச்சைக்குரிய செயலாக கருதி விலக்கி வைக்காமல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு காரணமாக தமிழகத்தில் சமூகநீதி எந்த நிலையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதற்காக, தமிழகத்தில் மட்டுமாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதற்கான நடவடிக்கைகளை அரசு இப்போதே தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.