மக்களவை துணை சபாநாயகரும் அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான தம்பிதுரை மத்திய அரசு வட்டாரங்களில் சக்தி மிக்கவர்களாக உள்ள அனைவருடனும் நேரடியாக தொடர்பில் உள்ளதாக தமிழக உளவுத்துறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ரிப்போர்ட் கொடுத்துள்ளது. கடந்த 15 நாட்களாகவே மத்திய அரசுக்கு எதிராக மிகத் தீவிரமான கருத்துகளை தம்பிதுரை கூறி வருகிறார். அதுவும் தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கான முயற்சி நடைபெறுகிறது என்று தம்பிதுரை கூறிய கருத்து தமிழக அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. 

தி.மு.கவிற்காகத்தான் பா.ஜ.க அ.தி.மு.க அமைச்சர் மற்றும் டி.ஜி.பி வீட்டில் சி.பி.ஐ ரெய்டு நடத்தியதாக கூறியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையே அதிர வைத்தது. ஏனென்றால் சசிகலாவை ஓரம்கட்டிய பிறகு டெல்லியில் சுமூகமாக பேசி தமிழகத்தில் எடப்பாடி அரசு அமைய உதவி செய்தவர்களில் தம்பிதுரையும் ஒருவர். அந்த அளவிற்கு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தவர் திடீரென பா.ஜ.கவிற்கு எதிராக மிகத் தீவிரமாக பேச ஆரம்பித்தது முதலமைச்சர் எடப்பாடிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மேலும் தம்பிதுரை வீட்டில் ரெய்டு என்று ஊடகங்களில் வெளியான தகவல்களும் அ.தி.மு.கவிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தம்பிதுரையின் நடவடிக்கைகள் குறித்து உளவுத்துறையிடம் முதலமைச்சர் ரிப்போர்ட் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திடீரென பா.ஜ.கவிற்கு எதிரான பேச்சுகளை தம்பிதுரை குறைத்துக் கொண்டார். மேலும் பா.ஜ.கவுடன் தாங்கள் நட்புறவாகவே இருப்பதாக பேச ஆரம்பித்தார். இது குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்கள் உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவல்களில், தற்போதும் பா.ஜ.க தலைவர்களுடன் தம்பிதுரை நெருக்கமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பா.ஜ.கவிற்கு எதிராக தம்பிதுரை பேசியது கூட டெல்லியில் இருந்து சில தலைவர்கள் கொடுத்த சிக்னலின் அடிப்படையில் தான் என்றும் கூறப்பட்டிருந்தாக சொல்லப்படுகிறது. தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்கு முயலும் சிலர் தம்பிதுரையை பயன்படுத்தி வருவதாகவும் ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருந்தது.  இதனை தொடர்ந்து தம்பிதுரையின் செயல்பாடுகளை கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.