தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் பிரச்சினையை எவ்வாறு கையாளுவது குறித்து தெரியாத, திறமையில்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளதாக காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

தென்காசியில் இதுகுறித்து பேசிய அவர், ’’தற்போது வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றை எவ்வாறு கையாளுவது என்பது பற்றி தெரியாத, திறமையில்லாத அரசாக மத்திய, மாநில அரசுகள் இருக்கின்றன. ஏழை, எளிய மக்களின் வேதனையத் தீர்க்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இந்த காலத்தில் அனைத்து குடும்பத்துக்கும் தலா ரூ.7500 வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியும் இன்னும் அதனை செயல்படுத்த முடியாத அரசாக பாஜக அரசு உள்ளது.

வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் பணிபுரியும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 4 கோடி பேர் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் நிலை பல இடங்களில் ஏற்பட்டது. அனைத்துக் கட்சிகளை இணைந்து குழு அமைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக்கொண்டு இருக்கும் அரசாக இருக்கிறது. இனி ஊரடங்கு தேவையா என நிபுணர் குழு, மருத்துவ குழுக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’’என அவர் தெரிவித்தார்.