இது பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து  தெரிவித்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள்  பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தேசிய புலனாய்வு முகமை   NIA விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விரைவில் NIA விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் NIA களமிறங்க கூடும் என மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் கோலாகல சீனிவாசன் தெரிவித்துள்ளார். லாவண்யா விவகாரத்தில் சிபிஐ விசாரணை, பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரத்தில் NIA போன்றவை தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதன் திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்கப் பட்டாலும் மறுபுறம் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்ற விமர்சனமும் இருந்து வருகிறது. இந்த விமர்சனத்தை அதிமுகவை காட்டிலும் பாஜக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. இது மட்டுமின்றி திமுக அரசுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கடுக்காக முன்வைத்து வருகிறது அண்ணாமலை தலைமையிலான பாஜக. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகியுள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், ஆட்கடத்தல், பழிவாங்கும் கொலைகள், கூலிப்படை கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என பாஜக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் மதமாற்றம் தலைதூக்கி விட்டது என்ற பகீர் குற்றச்சாட்டை பாஜக முன்வைத்துள்ளது. 

அதாவது அரியலூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மாணவி லாவண்யா கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் இருக்கும்போது அவர் பேசியதாக வீடியோ வெளியானது, அந்த வீடியோவை மேற்கோள்காட்டி பள்ளி மாணவியை மதமாற்றம் செய்ய அப்பள்ளி நிர்வாகம் முயற்சித்தது, அதனால்தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார் என பாஜக குற்றம் சாட்டியது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான வீடியோவை பதிவிட்டு இறந்த மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். பின்னர் அது தேசிய அளவில் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதை விசாரிக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்ட 4 பேர் கொண்ட குழுவை தமிழகம் அனுப்பியுள்ளார். ஆனால் மதமாற்றம் செய்யப்பட்டு முயற்சி நடந்தது என்ற குற்றச்சாட்டை தமிழக காவல்துறை மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதுடன். தமிழகத்தில் எப்படியாவது மதக்கலவரம் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் பாஜக இப்படி கூறி வருகிறது என்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

இது குறித்து பேசிவரும் பாஜக தலைவர்கள் திமுக இந்து மதத்துக்கு எதிராகவும், கிறிஸ்தவ இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால்தான் இந்த விவகாரத்தை திசை திருப்ப தமிழக அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதே நேரத்தில் நீட் விவகாரமும் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. ஏற்கவே நீட் விலக்கு கோரி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கிறார்.மீண்டும் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மத்திய அரசால் நீட் என்ற பெயரில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப் படுகின்றனர் என தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் உரையாற்றியுள்ளார். இந்நிலையில்தான் திடீரென பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் என்ற ரவுடி, பாஜக நீட்டுக்கு ஆதரவாக பேசிவருவதாலும், நீட் தேர்வை எதிர்த்தும் பாஜகவின் தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியுள்ளார்.

இது பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தேசிய புலனாய்வு முகமை NIA விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விரைவில் NIA விசாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பலர் பல வகையில் கருத்து கூறி வரும் நிலையில், மூத்த பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான கோலாகல சீனிவாசன் இந்த விவகாரத்தை NIA விசாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். அது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது:- பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது டெல்லியில் உள்ள தலைவர்களை தமிழகம் நோக்கி திரும்பி பார்கவைத்துள்ளது. பாஜக தலைவர்கள் கோரிக்கை வைத்தது போலவே அநேகமாக இந்த விஷயம் NIA போய் முடிய வாய்ப்பிருக்கிறது. NIA விசாரிக்கும் பட்சத்தில் இதற்கு பின்னால் இருக்கிற சதி வலைகள் ஏதேனும் இருந்தால் அது அம்பலமாகும் எனக் கூறியுள்ளார்.

லாவண்யா விவகாரத்தில் சிபிஐ விசாரணை, இப்போது NIA விசாரணை போன்றவை தமிழக அரசுக்கு எதுக்குடி ஏற்படுத்தக்கூடும் என அவர் கூறியுள்ளார். ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டது ஸ்டாலின் அரசை இடையூறு செய்யத்தான் என திமுக கூட்டணி கட்சிகள் ஏற்கனவே விமர்சித்து வருகின்றன. இதே நேரத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு தருணங்களில் திமுக அரசை கலைக்க வேண்டும் என கூறிவருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் வழக்குகளில் மத்திய விசாரணை அமைப்புகள் தலையிடுவது சூழல் ஏற்பட்டு வருகிறது. இது தொடரும் பட்சத்தில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. ஏற்கனவே நீட் விவகாரத்தில் ஆளுநர் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், இது போன்ற விவரங்கள் சூழ்நிலையே மேலும் தீவிரப்படுத்தும் என்று கூறப்படுகிறது.