பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமாக மிரட்டி வீடியோ பதிவு செய்த விவகாரம் தமிழகத்தை உலுக்கி வருகிறது. இது தொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 


இந்த விவகாரத்தில் அதிமுக பிரமுகரும் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால், பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினரே பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக காவல்நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைத்ததாக கூறப்படுகிறது. 

இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் மருமகன்  சபரீசன் சமூகவலைதளங்களில் பரப்பி அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தப் பார்க்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பினர் குற்றம்சாட்டினர். மேலும் பொள்ளாச்சி ஜெயராமன் , மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து பொள்ளாச்சி வீடியோ விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசன் மீது பொள்ளாச்சி ஜெயராமன் புகாரின் பேரின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பொள்ளாச்சி சம்பவம் குறித்த வீடியோவை, வெளியிட்ட நக்கீரன் இதழ், இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது போன்ற காரணங்களுக்காக , துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரைத் தொடர்ந்து,  நக்கீரன் கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சக்கீரன் கோபாலை கைது செய்ய சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்த வழக்கில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியின்  செயல்  தலைவர் மயூரா ஜெயகுமாருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் அனுப்பிய சம்மனில் பொள்ளாச்சி விவகாரத்தில் தேவையற்ற முறையில் சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் அவர் பரப்பியதாக  சிபிசிஐடி குற்றம்சாட்டியுள்ளது.