தமிழகத்தில் எந்த அரசியல்வாதியிடமும் ‘அண்ணே அந்த பொள்ளாச்சி!’ என்று பேச்சை எடுத்தாலே...’அய்யோ என்னோட இத்தனை ஆண்டு கால அரசியல்ல நான் இதுவரைக்கும் போகாத ஒரு தொகுதின்னா அது பொள்ளாச்சி தான்யா!’ என்று எக்குதப்பாக எஸ்கேப் ஆகிறார்கள். அந்தளவுக்கு அந்த ஊரின் சிறப்பு, பிய்ந்த செருப்பாகி கிடக்கிறது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அ.தி.மு.க.வின் தலை உருட்டப்படும் விவகாரம் ஊரறிந்ததே. இந்நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான மயூரா ஜெயக்குமாருக்கு ‘ஆஜராகுங்க’ என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சம்மன் அனுப்பியுள்ள விவகாரம்தான் இப்போது ஹைலைட் ஹாட்டாக போய்க் கொண்டிருக்கிறது அரசியல் வட்டாரத்தில். இதை வைத்து அ.தி.மு.க. கூட்டணியினர் தி.மு.க. கூட்டணியை கழுவிக் கழுவி ஊற்றத் துவங்கியுள்ளனர். 
 
‘மயூராவை ஏன் விசாரணைக்கு அழைச்சாங்க? இதுல அவரோட பங்கு என்ன?’ என்று ஆளாளுக்கு கேள்விகளுக்கு றெக்கை கட்டி பறக்கவிட்டு பஞ்சாயத்தை கிளப்பியிருக்கும் நிலையில், மயூராவிடம் இது பற்றி விளக்கம் கேட்டனராம் சில நிருபர்கள். அதற்கு “என்னோட அரசியல் உழைப்பை பாராட்டி, ஊக்குவிக்கும் விதமாக என்னை சமீபத்தில் மாநில செயல் தலைவர்கள் நான்கு பேரில் ஒருவராக அறிவித்தார் ராகுல்ஜி.  என் உழைப்புக்கான பெரிய அங்கீகாரம் அது. அப்போது என்னை வாழ்த்தி, சால்வை போட பலர் வந்தனர். 

அப்போது திருநாவுக்கரசும் வந்தாராம். யார் வந்தார்கள், போனார்கள் என்று எனக்கு தெரியாது. கடந்த பிப்ரவரி மாதம் ஒரு குறிப்பிட தேதியில் எங்கே இருந்தீங்க? என்று சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தன் கஸ்டடியில் திருநாவுக்கரசுவிடம் விசாரித்தபோது ‘காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சால்வை போட கோயமுத்தூர் போனேன்.’ என்று சொல்லியிருந்தாராம், அதன் அடிப்படையிலேயே என்னை விசாரணைக்கு அழைச்சு சம்மன் அனுப்பியிருக்காங்க. 

ஒரு அரசியல் தலைவருக்கு ப்ரமோஷன் வருகையில் இப்படி பல பேர் வந்து வாழ்த்துவது வழக்கம். எல்லா கட்சியிலும் இது நடக்கும். அதற்காக வாழ்த்த வந்தவரின் நல்லது, கெட்டதுகளில் நமக்கும் பங்கு இருக்குமுன்னு சொல்ல முடியுமா? எனக்கு எந்த பயமுமில்லை, நான் கூலாக இருக்கிறேன். ஆனால்  எதற்காக எனக்கு சம்மன் வந்துள்ளது எனும் உண்மை புரியாமல், அரசியல் எதிரிகள் பிதற்றுகிறார்கள். “ என்றிருக்கிறார். சர்தான்!