10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு !! தமிழக எல்லை வந்தடைந்த காவிரி நீர்… கொண்டாட்டத்தில் டெல்டா விவசாயிகள் !!
கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனநீர் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறக்கப்பட்ட நீர் தற்போது தமிழக எல்லையான பிலிகுண்டு வந்தடைந்துள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக , காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
கே.ஆர்.எஸ். அணையிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீரும், கபினியிலிருந்து 4000 கன அடி நீரும் தற்போது திறக்கப்படுகிறது. கிருஷ்ணராஜ சாகர், கபினி ஆகிய இரு அணைகளுக்கும் வரும் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்து சேர்ந்தது. இந்த நீர் இன்று மாலைக்குள் மேட்டூரை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் வரும் நாட்களில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படுகிறது.