காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தந்த காலக்கெடு முடிந்ததால் மோடி மீது செம்ம டென்ஷனில் இருக்கிறார்கள் தமிழக மக்கள். மோடி, தமிழ்நாடுக்கு இந்த விஷயத்தில் அல்வா தரத்தான் போகிறார் என்பது தெரிந்தும் கூட வெறும் ஆலோசனை கூட்டத்தை மட்டுமே நடத்தி நாட்களை கடத்தியதால் எடப்பாடி அரசு மீது எக்கச்சக்க ஆதங்கத்தில் இருக்கின்றனர். 

இந்நிலையில் ’காவிரி விவகாரத்தில் மக்கள் மத்தியில் ரியாக்‌ஷன் எப்படி இருக்குதுன்னு பார்த்து சொல்லுங்க’ என்று தன் அமைச்சரவை சகாக்களுக்கு உத்தரவிட்டிருந்தார் முதல்வர். அமைச்சர்களும் தங்கள் சொந்தமாவட்டத்திலும், துறை பணிகளுக்காக தாங்கள் சுற்றுப்பயணம் போகும் பகுதிகளிலும் அதிகாரிகளிடம் பேசி இது தொடர்பான தரவுகளை சேகரித்துக் கொடுத்தனர் அமைச்சர்கள். அதன்படி ’காவிரி விஷயத்தில் தமிழக நலனில் அக்கறை இல்லாத மோடி, அவருக்கு காவடி தூக்கும் தமிழக முதல்வர்கள்! இந்த மூன்று பேரையும் எந்த சூழலிலும் ஆதரிக்க கூடாது.’ என்று மக்கள் பெரிய முடிவில் இருப்பதை ஸ்மெல் செய்து முதல்வரிடம் தந்தனர் அமைச்சர்கள். 

இதன் அடிப்படையில் சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி, மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது தமிழக அரசு. அதேபோல் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார் எடப்பாடி. அதில் தி.மு.க.வை திட்டிவிட்டு, ஜெயலலிதாவை புகழ்ந்திருப்பவர், பின் ‘காலக்கெடு முடிந்தும் தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தற்போது தீர்ப்பில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு, காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானது.’ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த வரிகளை எடுத்து வைத்துக் கொண்டு ‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் மீது கடும் கோபத்தில் இருக்கிறார், மத்திய அரசை விமர்சித்து அறிக்கை விட்டுள்ளார், மத்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியுள்ளார்.’ என்று அமைச்சர்களும், அரசு அதிகார மையங்களும் தங்களுக்கு சாதகமான ரூட்டின் வாயிலாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்து கொண்டிருக்கின்றனர். அதாவது காவிரி விஷயத்தில் தமிழக அரசு மீது மக்களுக்கு இருக்கும் கோபத்தை மாற்றுவதற்கான முயற்சியாக இதை செய்கின்றனர். ஆனால் மக்கள் மத்தியில் இது எந்தளவுக்கு எடுபடுமென புரியவில்லை. 

தமிழக அமைச்சரவையின் இந்த முடிவை விமர்சித்திருக்கும் அரசியல் பார்வையாளர்கள், “சாதாரண பேன் பூச்சியை பெருமாள் ரேஞ்சுக்கு பூதாகரமாக்கி சீன் போடும் செயலைத்தான் செய்கிறார்கள் தமிழக அமைச்சர்கள். முதல்வர் எடப்பாடி அப்படியொன்றும் மத்திய அரசை விமர்சிக்கவோ, கண்டிக்கவோ இல்லை. மோடி முழுக்க முழுக்க தங்கள் மாநிலத்துக்கு சாதகமாக நடக்கிறார் என்று தெரிந்தும் கூட கர்நாடக முதல்வர் சித்தராமையா ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது. மீறினால் மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.’ என்று படு தெனாவெட்டாக பிரதமரை மிரட்டினார். 

ஆனால் முழுக்க முழுக்க நியாயம் தங்கள் பக்கமிருந்தும் கூட தமிழக முதல்வர் ஏதோ வெண்ணெய் மீது எண்ணெய் தடவுவது போல் பேசிவிட்டு, அதை கோபம் என்று சீன் போட்டால் நம்புவதற்கு தமிழக மக்கள் அவ்வளவு ஏமாளிகளா?சித்தராமையாவின் தைரியம், தெனாவெட்டில் ஒரு துளியை காட்டினாலும் எடப்பாடியாரை தமிழக மக்கள் கொண்டாடுவார்களே!” என்கிறார்கள்.