cauvery Management commission published govt gazet
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழக மக்களின் பெரும் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால், தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்த மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் வரைவு திட்டம் ஒன்றை தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும், , பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனாலும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அறிவிப்பு இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் இதுதொடர்பாக மத்திய அரசிதழ் துறைக்கு பரிந்துரை மின்னஞ்சல் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.
காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
